தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை – கண்காணிப்புக் கோபுரங்கள், CCTV கேமிராக்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை – கண்காணிப்புக் கோபுரங்கள், CCTV கேமிராக்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான, தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள், C.C.T.V. கேமிராக்கள், கூடுதல் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, இரவு பகலாக தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

தீபாவளி என்றாலே ஆயத்த ஆடைகள், துணி ரகங்கள் வாங்க ஜவுளிக்கடைகளுக்கு செல்லுதல், தள்ளுபடி விலையில் தங்க நகைகள் வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார ஆபரணப் பொருட்கள், இனிப்புகள் என பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் அதிகரிப்பது வாடிக்கைதான். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், சென்னையின் பல்வேறு வணிக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்காடி தெருவான, மாம்பலம் ரங்கநாதன் தெருவில் தினமும் லட்சக்கணக்கானோர் காலையிலிருந்தே குழுமிய வண்ணம் உள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, தீபாவளிப் பண்டிகையையொட்டி, மக்கள் அச்சமின்றி, பாதுகாப்புடன் துணி மற்றும் பொருட்களை வாங்கிச் செல்ல, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் உத்தரவுப்படி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மேற்பார்வையில், துணை ஆணையர்கள் தலைமையில் தற்காலிக காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு, அருகில் உள்ள பகுதிகளிலிருந்து வருகை தரும் மக்கள், துணிரகங்கள் மற்றும் பொருட்களை எவ்வித சிரமுமின்றி வாங்க ஏதுவாக, தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, மயிலாப்பூர், வேளச்சேரி என பல்வேறு பகுதிகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க C.C.T.V. கேமிராக்கள் மூலம் காவல்துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, பொருட்களை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்ல முடிகிறது.

தியாகராயநகர், உஸ்மான்ரோடு, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் 2 காவல்துணை ஆணையாளர்கள் உள்பட, 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 100 ஊர்க்காவல் படையினரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு, தியாகராய நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ரோந்து சுற்றி, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. 24 மணிநேரமும் செயல்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியுடன், தீபாவளி ஷாப்பிங்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தீபாவளிப் பண்டிகையை ஒலி குறைந்த, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், பட்டாசுகளை வெடித்து கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. விபத்தில்லாத, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுமாறு, விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.