தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017,

சென்னை : சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கே.சங்கரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சங்கரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை துணை ராணுவ வீரர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த  கதிர்வேல் என்பவரின் மகன் கே. சங்கர், உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து தான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்  சங்கரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், உயிரிழந்த  சங்கரின் குடும்பத்திற்கு, இருபது லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.