தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி

ஞாயிறு, நவம்பர் 20,2016,

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட்டதால் இன்றுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி  கூறியுள்ளார். 

அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை அங்குள்ள சாதாரண சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததன் அறிகுறியாக இந்த சாதாரண வார்டு மாற்றம் கருதப்படுகிறது. அப்பல்லோ வாயிலில் இருந்த அ.தி.மு.க தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு உற்சாகமடைந்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், இந்த நாள் அதிமுகவினரின் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று கூறினார்.மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் நலம் பெற்றுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறினார். அதேபோல நாஞ்சில் சம்பத், அம்மா குணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளதாக கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் அ.தி.மு.க நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களுக்காக உழைப்பவர், தானதர்மம் செய்பவர் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மறுபிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி. முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தான் முடிவெடுக்கும்.இன்றுதான் எங்களின் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை எல்லாம். மக்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. அம்மா இதுவரை ஓய்வு எடுத்ததே இல்லை. இத்தனை நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து விட்டார் விரைவில் மக்கள் பணியாற்றுவார். ஓய்வின்றி மக்களுக்கு பணி செய்வார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.