துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற ரித்திக்கிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து: ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவு

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற ரித்திக்கிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து: ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவு

திங்கள் , ஜனவரி 11,2016,

சென்னை : துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சென்னை பள்ளி மாணவர் ரித்திக் என்பவருக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வருமாறு:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 27.12.2015 அன்று இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட சென்னை, முகப்பேரைச் சேர்ந்த கேந்த்ரிய வித்யாலாய பள்ளி மாணவர் செல்வன் சு. ரித்திக் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற செல்வன் சு.ரித்திக்கிற்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற செல்வன் சு.ரித்திக்கிற்கு ஊக்கத் தொகையாக நான்கு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.