துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 08,2015,

தமிழகத்தில் மழை-வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மலிவு விலையில் மக்களுக்கு காய்கறிகள் வழங்குவதற்காக வெளி மாநிலங்களிலில் இருந்து கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். மேலும், அரையாண்டுத் தேர்வை ஒத்திவைத்து தாம் வெளியிட்ட உத்தரவு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட தாம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவை வழங்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை தாம் நேற்று வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சில உதவிகள் வழங்க தாம் தற்போது உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின்உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்தை உடனே செலுத்த வேண்டியதில்லை என தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்தலாம் என தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அவ்வாறு காலதாமதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு எவ்வித அபராதத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முழுவீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர் – அவர்கள் நோயினால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கு தடுப்பூசிகள் உடனடியாக போடப்படவேண்டும் என தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள், கையுறைகள், மழை கோட் மற்றும் ‘கம்பூட்ஸ்’ ஆகியவற்றை உடனடியாக வழங்கவும் தாம் ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும், மேலும், சுகாதாரத் துறையினால், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆயிரத்து 105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், தமது உத்தரவின் பேரில், 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது – இங்கு உருளைக் கிழங்கு கிலோ 23 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்ட போதிலும், வெளிச் சந்தையில் கிலோ 45 ரூபாய் வரை விற்பதாக தெரிய வருகிறது – எனவே, கூடுதலாக 100 டன் உருளைகிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், கடந்த 7-ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்திட தாம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது – அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் – இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப தாம் பள்ளிக்கல்வித் துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.