தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை

தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை

செவ்வாய், ஏப்ரல் 19,2016,

உள்கட்சி ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி என மார்தட்டிக் கொண்டிருக்கும் திமுகவின் வாரிசு அரசியல் அனைவரும் அறிந்ததுதான். அதிலும், முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக தலைமையால் நியமிக்கப்பட்டார் என். பெரியசாமி. இதையடுத்து, அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, 1989 பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக பெரியசாமி களமிறங்கினார். அப்போது, அதிமுகவில் ஜெ. அணி, ஜா. அணி என இரு பிரிவுகள் இருந்ததால், என். பெரியசாமி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.பி.சி.வீ. சண்முகத்தைவிட 547 வாக்குகள் வித்தியாசத்தில் பெரியசாமி வெற்றி பெற்றார்.

1991 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் களமிறங்கிய என். பெரியசாமியை, அதிமுகவை சேர்ந்த வி.பி.ஆர். ரமேஷ் தோற்கடித்தார். அடுத்து, 1996 தேர்தலிலும் மூன்றாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் என். பெரியசாமி. தமிழகம் முழுவதும் திமுக- தமாகா கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு நிலவிய அந்தத் தேர்தலில், 56 ஆயிரத்து 511 வாக்குகள் பெற்று பெரியசாமி வெற்றி பெற்றார்.

திமுக ஆட்சி அமைந்தபோதிலும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த பெரியசாமிக்கு, கட்சித் தலைமை அமைச்சர் பதவியை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக திருச்செந்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிபர் சந்திரன் அமைச்சராக்கப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் தனது வாரிசான கீதா ஜீவனை கட்சிக்கு அறிமுகப்படுத்திய என். பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை மகளுக்குப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து, 2001 பேரவைத் தேர்தலில் நான்காவது முறையாக களமிறங்கிய என். பெரியசாமி, அப்போதையை அதிமுக வேட்பாளரான ராஜம்மாள் சாம்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் களம் கண்ட அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேனியல்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். இதேபோல, ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த கீதா ஜீவன் உறுப்பினராக வெற்றி பெற்றபோதிலும் போதிய ஆதரவு இல்லாததால் மீண்டும் தலைவராக முடியவில்லை.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 2006 பேரவைத் தேர்தலில் பெரியசாமி போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்க மறுத்தது. இதையடுத்து, அந்தத் தேர்தலில் மகள் கீதா ஜீவனை வேட்பாளராக்கினார் பெரியசாமி. அந்தத் தேர்தலில் கீதா ஜீவன், அதிமுக வேட்பாளர் டேனியல்ராஜைவிட 15,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்கு சென்றார்.

அவருக்கு சமூகநலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தபோதிலும் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 2011 ஆம் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கிய கீதா ஜீவன் 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதையை சட்டப்பேரவை உறுப்பினரான சி.த. செல்லப்பாண்டியனிடம் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராகக் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து தற்போதையை உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த சி.த. செல்லப்பாண்டியனே மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பை தனது மகன் என்.பி. ஜெகனுக்கு வாங்கிக் கொடுத்தார் என். பெரியசாமி.

1986ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் பெரியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே மாறிமாறி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்கட்சி ஜனநாயகம் பேணிக் காக்கப்படுவதாகக் கூறப்படும் திமுகவில் குறுநில மன்னர்போல ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே மாறிமாறித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது எந்தவிதத்தில் ஜனநாயகமாகும் எனக் கேள்வி எழுப்புகின்றனர் பெயர் கூற விரும்பாத திமுக நிர்வாகிகள்.