தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் 8 இடங்களில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. தூத்துக்குடி வட்டம் கூட்டுடன்காடு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆழிகுடி, கோவில்பட்டி வட்டம் அகிலாண்டபுரம், விளாத்திகுளம் வட்டம் பெரியசாமிபுரம், எட்டயபுரம் வட்டம் சிங்கிலிபட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியபுரம், திருச்செந்தூர் வட்டம் லட்சுமிபுரம், வாகைவிளை, சாத்தான்குளம் வட்டம் பிடானேரி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.