தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படாமல்  தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, ஜூன் 10,2016,

தமிழகத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 4 முதல் 6 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 20 மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதேபோல் புதன்கிழமையும் மழை பெய்தது. அன்று 6.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கித்தவித்த மக்களை காப்பாற்ற அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.

எனவே இப்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து, மழையினால் சேதம் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினத்தில் இருந்து 1913 என்ற ‘ஹெல்ப் லைன்’ (உதவி எண்)மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:–

மாநகராட்சியில் நிரந்தர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, பாதிப்பில் இருந்து நிவாரணத்தையும் தீர்வையும் பெற முடியும். மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்காக 600 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறோம்.

இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இரவு நேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரவில் அவர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து, மரம் விழக்கூடிய இடங்கள், மழை நீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

60 படகுகள்

மரம் விழுந்துவிட்டால் 2 மணி நேரத்துக்குள் அதை அப்புறப்படுத்தி, அனைத்தையும் சரி செய்யக்கூடிய அளவில் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக மண்டலத்துக்கு 10 முதல் 15 மரம் வெட்டும் எந்திரங்களை தயாராக வைத்து இருக்கிறோம். ஒரு மண்டலத்துக்கு 2 ஜே.சி.பி. எந்திரம் என்ற வீதத்தில் 15 மண்டலங்களுக்கும் 30 ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளன.

அதுபோல ஒரு மண்டலத்துக்கு 4 படகுகள் என்ற வீதத்தில் 60 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவை தவிர ஒரு கால்வாய்க்கு 2 படகுகள் வீதம் நிறுத்தப்பட்டு உள்ளன.

வெள்ளம் வடியாத இடங்கள்

வெள்ளம் வடியாமல் இருக்கும் இடங்கள், வெள்ள நீரோட்டம் சரியாக இல்லாத இடங்கள், அடைப்புக்கு உள்ளான பகுதிகளை அலுவலர்கள் அடையாளம் கண்டு அவற்றை சரி செய்து வருகிறார்கள்.

வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றால் அதை அப்புறப்படுத்த ‘சூப்பர் சக்கர்’ என்ற நவீன எந்திரங்கள் தேவையான அளவில் நிறுத்தப்பட்டு உள்ளன. ஒரு மண்டலத்துக்கு 20 பேர் என்ற வீதத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை, பொறியியல் துறை உள்பட 8 துறைகள், இந்த பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றன.  இவ்வாறு அவர் கூறினார்.