தென்மேற்கு வங்கக் கடலில், தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை : மேலும் 5 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்கக் கடலில், தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை : மேலும் 5 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில், மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

அந்தமான் தென்கிழக்கே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்கேனக்கல், நெல்லை மாவட்டம் குற்றாலம் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர பாதுகாப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.