தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற காவலர்களுக்கு 1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற காவலர்களுக்கு  1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (26.2.2016) தலைமைச் செயலகத்தில், அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 134 காவல்துறை வீரர்களுக்கு 1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்கினார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காவல்துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள், துப்பாக்கிச் சுடுதல், அதிரடி படைத்திறன் மற்றும் குற்றப்புலனாய்வு, வெடிபொருள் கண்டு பிடித்தல், கணினி இயக்கம் முதலிய பணித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

2004-ஆம் ஆண்டு முதல் காவல் பணித்திறன் போட்டிகளில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசாக முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பரிசுத் தொகையினை 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பத்து மடங்காக உயர்த்தி முறையே 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் என்ற அளவில் வழங்க ஆணையிட்டார்கள். மேலும், குழுப்போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்கான கோப்பைகளை வென்றால், அணியிலுள்ள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையினையும் வழங்கிட ஆணையிட்டார்கள்.

அகில இந்திய காவல்துறையினருக்கான பணித் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு பரிசுகளை வழங்கும் விழாவில், தமிழ்நாடு காவல்துறை பல்வேறு போட்டிகளில் வென்றுள்ள கோப்பைகளை ஜெயலலிதா அவர்கள் பார்வையிட்டார்கள்.

அப்போது, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், தமிழ்நாடு காவல்துறை வென்றுள்ள கோப்பைகள் குறித்தும், அந்த கோப்பைகள் எந்தெந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்கள். அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஜெயலலிதா தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.

புது தில்லியில் நடைபெற்ற 63-வது அகில இந்திய அளவிலான காவலர் நீச்சல் போட்டியில், தமிழ்நாடு காவல்துறை நீச்சல் குழுவைச் சேர்ந்த 4 காவல்துறை வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் வெண்கலப்பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்;

11-வது, 14-வது மற்றும் 15-வது அகில இந்திய காவல் துறையினர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல் துப்பாக்கி சுடும் குழு, மாநிலங்களுக்கிடையேயான சிறந்த அணிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 45 காவல்துறையினருக்கு பரிசு தொகையாக மொத்தம் 40 லட்சம் ரூபாய்;

ஹரியானா மாநிலம் – மதுபன் மற்றும் கேரள மாநிலம் – திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் முறையே 26.11.2014 முதல் 30.11.2014 வரை நடயத 63-வது அகில இந்திய அளவிலான தடகளப்போட்டி மற்றும் 7.9.2015 முதல் 11.9.2015 வரை நடைபெற்ற 64-வது அகில இந்திய அளவிலான தடகளப்போட்டி மற்றும் கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 5 காவலர்களுக்கு பரிசுத்தொகையாக 19 லட்சம் ரூபாய்;

ஐடிபிபி புதுடில்லியில் 1.3.2015 முதல் 5.3.2015 வரை நடைபெற்ற 63-வது அகில இந்திய அளவிலான மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு, பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றவர்கள் மற்றும் ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என 3 காவலர்களுக்கு பரிசுத்தொகையாக 7 லட்சம் ரூபாய்; 64-வது பி.என். மாலிக் நினைவு அகில இந்திய கால்பந்து விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை குழு மூன்றாம் இடத்தை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 22 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத்தொகையாக தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்;  மத்திய பிரதேச மாநிலம் – குவாலியரில் 21.2.2011 முதல் 26.2.2011 வரை நடைபெற்ற அகில இந்திய அளவிலான அதிரடிப்படை போட்டி – 2010ல் தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் இடத்திற்கான கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 23 காவல்துறை வீரர்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 7 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்; பஞ்சாப் மாநிலம் – பில்லாரில் 24.3.2015 முதல் 29.3.2015 வரை நடைபெற்ற 58-வது அகில இந்திய அளவிலான காவல்திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை குழு 6 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப்பதக்கம், என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த போட்டியில் 2 சுழற் கோப்பைகளையும், அகில இந்திய அளவில் சிறந்த காவல் அணிக்கான கோப்பையையும் தமிழ்நாடு காவல் அணி வென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்ற 32 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத்தொகையாக மொத்தம் 64 லட்சம் ரூபாய்; என மொத்தம் 134 காவல்துறை வீரர்களுக்கு 1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையினை  ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கி வாழ்த்தினார்கள்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து பரிசுத் தொகையினைப் பெற்றுக் கொண்ட காவல்துறை வீரர்கள் தங்களது நெஞ்சார்யத நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு, முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள்பேசும் போது , “உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இத்தகைய போட்டிகளில் மென்மேலும், பலமுறை கலந்து கொண்டு உங்கள் திறமைகளைக் காட்டி பரிசுகளை வென்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.