தேமுதிகவினர் சட்டப் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா

தேமுதிகவினர் சட்டப் பேரவைக்கு வர அதிமுகவே காரணம்: அமைச்சர் கோகுலஇந்திரா

வியாழன் , பெப்ரவரி 18,2016,

சட்டப் பேரவைக்கு அதிமுகவால்தான் தேமுதிகவினர் வந்தனர் என்று கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா கூறினார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் தேமுதிக உறுப்பினர் (ஆரணி) ஆர்.எம்.பாபு முருகவேல் பேசியதாவது:-
ஆரணியில் பட்டு நெசவில் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த கணினி வடிவமைப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். அண்ணா கூட்டுறவு பட்டு நெசவாளர் சங்கம், அன்னை அஞ்சுகம் நெசவாளர் சங்கம் ஆகியன பெயருக்காகவே இயங்குகின்றன. இதை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளதா? என்றார்.
இதற்கு பதிலளித்து கோகுல இந்திரா கூறியது:-
அதிமுக அரசைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி உறுப்பினர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் அந்தப் பெயர் அப்படியேதான் உள்ளது. நாங்கள் நினைத்திருந்தால் மாற்றியிருக்க முடியும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஜனநாயக முறைப்படி கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்தியது அதிமுகதான். இந்த அவையில் நீங்கள் (தேமுதிக) இருக்கிறீர்கள் என்றால் அதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.