தேய்ந்துபோன தேமுதிக, தேர்தலில் அடியோடு அழிந்துபோகும் : நலத்திட்ட உதவிகள் வழங்கி நிர்மலா பெரியசாமி பேச்சு

தேய்ந்துபோன தேமுதிக, தேர்தலில் அடியோடு அழிந்துபோகும் : நலத்திட்ட உதவிகள் வழங்கி நிர்மலா பெரியசாமி பேச்சு

சனி, பெப்ரவரி 27,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்  நடந்தது.

ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணைமேயர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி, ” சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் எம்.ஜி.ஆர் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்தது. கருப்பு எம்.ஜி.ஆர் என விஜயகாந்தை வர்ணிக்கிறார்கள். தங்களுடைய கட்சிக்கு செல்வாக்கு உயரக்கூட எங்கள் தலைவரைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி அவரை அதிமுகவை தவிர வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது. அந்த மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி,  அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார். தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும்.என்று நிர்மலா பெரியசாமி காட்டமாக கூறினார்.