வேலூர் அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி,திமுக மாவட்ட அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்களே சூறையாடியதால் பரபரப்பு : போலீசார் குவிப்பு

வேலூர் அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி,திமுக மாவட்ட அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்களே சூறையாடியதால் பரபரப்பு : போலீசார் குவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 15,2016,

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தி.மு.க வேட்பாளர் பட்டியல் புதன் கிழமை  வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என புதன் கிழமை  இரவு அவரின் ஆதரவாளர்கள் அணைக்கட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதிலிருந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள்  நேற்று (14-ம் தேதி) நூற்றுக்கணக்கில் திரண்டு வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி வேட்பாளருமான ஏ.பி.நந்தகுமாரை சரமாரியாகத் தாக்க தொடங்கினர். இந்த கைகலப்பில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டை கிழிக்கப்பட்டது.

திடீரென அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைத்த அவர்கள், வேட்பாளர் நந்தகுமார், முன்னாள் மேயரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான கார்த்திகேயன், மாவட்ட அவை தலைவர் முகமது சகி உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக  திமுக மாவட்ட அலுவலகப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. வேட்பாளர் விவகாரத்தில், வேலூர் மாவட்ட திமுகவில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.