தேர்தலில் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி : மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றுவேன் என்றும் அறிவிப்பு

தேர்தலில் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி : மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றுவேன் என்றும் அறிவிப்பு

வெள்ளி, மே 27,2016,

சென்னை:நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வியத்தகு  வெற்றியை தந்து தம்மை மீண்டும் முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..,

நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கி உள்ளனர். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. 

தமிழக மக்கள் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.  வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி  வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.