தேர்தலுக்காக ‘பெரும் ஊழல் பூதங்களை’ புதைத்து மறைத்த திமுக – காங்

தேர்தலுக்காக ‘பெரும் ஊழல் பூதங்களை’ புதைத்து மறைத்த திமுக – காங்

சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2016,

தமிழகத்தில் உறுதியாகி விட்ட திமுக – காங்கிரஸ் கூட்டணியில், முன்பு கிளம்பிய ‘பெரும் ஊழல் பூதங்களை’ மீண்டும் கிணற்றுக்குள் போட்டு, தங்கள் வசதிக்கேற்ப மூடி விட்டன இரண்டு கட்சிகளும்.

‘புதைக்கப்பட்ட ஊழல் பூதம்’ 1:

காங்., தலைமையிலான சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்தது திமுக. ‘வளமான’ துறை வேண்டும் என்பதற்காகவே தொலை தொடர்பு துறையைப் பெற்றது. அதில் கிளம்பிய 2ஜி பூதம், நாட்டை உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஊழல் விஷயம் ஆனது.

கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் மகள் சிறைக்கு சென்றாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் கழண்டு கொண்டது காங்கிரஸ். ”பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு தெரிந்து தான் 2ஜி ஏலம் விடப்பட்டது” என அப்போதைய அமைச்சர் ஆ.ராஜா திரும்ப திரும்ப கூறியும், கண்டுகொள்ளத் தான் ஆளில்லை. தமிழகத்தில் திமுகவை ‘காவு’ வாங்க’ இந்த விவகாரம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

‘புதைக்கப்பட்ட ஊழல் பூதம்’ 2:

அதே ஐமுகூ., ஆட்சியில் தான், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ‘நீங்கள் அழுத்தம் கொடுத்தால் அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம்’ என அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் கெஞ்சி, கூத்தாடியும் திமுகவுக்கு ‘காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை’.

தமிழர்கள் அடியோடு வேரறுக்கப்பட்டனர். தமிழகத்தால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இது, தமிழகத்தில் திமுக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் திமுகவுக்கு படுதோல்விகளை பரிசாக அளித்தது.

தாமதமாக விழித்துக்கொண்ட திமுக., சென்ற லோக்சபா தேர்தலில் காங்கிரசை கழற்றிவிட்டது. இப்போது வரப்போகும் சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதால், இலங்கை தமிழர் படுகொலை விவகாரத்தை மறந்து விட்டு, மீண்டும் காங்., – திமுக கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டது.

ஆக, எந்த இரண்டு விவகாரங்கள் மத்தியில் காங்கிரசையும், மாநிலத்தில் திமுகவையும் ‘குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடியதோ’ அதே விவகாரங்களை தற்போது அக்கட்சிகள் ‘குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடி’ உள்ளன.

தமிழர்களிடம் மனசாட்சி உள்ள வரை, ஈழத்தமிழர்களுக்கு நடந்த துரோகம் உள்ள வரை, அவர்களின் அமைதியடையாத ஆன்மா உள்ள வரை, திமுகவும் காங்கிரசும் கனவில் கூட அரசியலில் பிழைக்க முடியாது. சென்ற தேர்தலை விட ஓட்டு சதவீதத்தை குறைய வைத்து தமிழர்கள் தக்க அடி கொடுத்தே தீருவார்கள்.

இந்த கூட்டணி  மூலம் அ.தி.மு.க வெற்றியை திமுக எளிமையாக்கி விட்டது  என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.