தேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் கபட நாடகம்

தேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் கபட நாடகம்

செவ்வாய், ஜனவரி 19,2016,

சென்னை – முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை அப்படியே எடுத்து 21.11.15 அன்று அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அது அவரது கட்சி பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஆதிநாதன் இந்த வழக்கில் ஆஜராக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் கருணாநிதி “நானே நேரில் ஆஜராகி அவதூறு வழக்கை சந்திப்பேன்” என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது.

காலை 10 மணி அளவில் கருணாநிதி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக காரில் வந்தார். அவரது கார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அருகில் உள்ள வாசல் வழியாக முதன்மை செசன்ஸ் கோர்ட்டை சென்றடைந்தது. பின்னர் கீழ்தளத்தில் உள்ள சாய்வு பாதை வழியாக லிப்ட் இருக்கும் பகுதிக்கு சென்ற கருணாநிதி, அங்கிருந்து லிப்ட் மூலம் முதல் மாடியில் உள்ள முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு சென்று நேரில் ஆஜரானார். 10.25 மணியளவில் முதல் மாடியில் உள்ள கோர்ட்டு வளாகத்திற்குள் கருணாநிதி சென்றார். மாநகர அரசு வக்கீல் இருக்கைக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்த சக்கர நாற்காலி நிறுத்தப்பட்டது. காலை 10.30 மணியளவில் நீதிபதி ஆதிநாதன் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். முதல் வழக்காக கருணாநிதியின் வழக்கை எடுத்து விசாரித்தார்.

பின்னர் மார்ச் 10–ந்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கருணாநிதியிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு முன்பும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் தனது வக்கீல்கள் மூலம் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இடைக்கால தடை பெற்றவர் கருணாநிதி. ஆனால் இந்தமுறை மட்டும் தானே, ஆஜராக போவதாக கூறியதோடு, நேரிலும் ஆஜராகியிருக்கிறார் கருணாநிதி.

இதற்கெல்லாம் காரணம் வரப்போகிற சட்டமன்ற தேர்தல் தான். ஏற்கனவே இவரது மகனும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார். தனது பயணத்தின் போது, சைக்கிளில் சென்றும், நடனமாடியும், கிரிக்கெட் விளையாடியும் இப்படி பல நாடகங்களை நடத்தியவர்தான் ஸ்டாலின். இப்பொழுது தனயனையும் மிஞ்சிவிட்டார் தந்தை. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோர்ட்டில் ஆஜராகி மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்பது கருணாநிதியின் கணக்கு. ஆனால் அவரது கணக்கு தப்பு கணக்காகவே முடியும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

கலைஞர் தொலைகாட்சிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறிய வழக்கில் தயாளுஅம்மாள் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் பலமுறை உத்தரவிட்டது. ஆனால் அவரது வயதை காரணம் காட்டி விதிவிலக்கு அளிக்குமாறு அவரது சார்பில் கோரப்பட்டது. அப்போது வயதை காரணம்காட்டிய கருணாநிதி குடும்பம், இப்போது மட்டும் வயதைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால்தான் கருணாநிதி கோர்ட்டில் ஆஜராகி இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்.