தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திங்கள் , மார்ச் 21,2016,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவையடுத்து, திரையால் மறைக்கப்பட்ட மறைந்த தலைவர்கள் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் கைத்தட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த 4–ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அண்ணா, பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, அம்பேத்கர், மூப்பனார் போன்ற மறைந்த தலைவர்கள் சிலைகள் திரையால், துணியால் மூடப்பட்டன. இதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள்– சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் இந்த அதிரடி உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் மறைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்கள் சிலைகளை திறக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி

சென்னை வேப்பேரியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை, தண்டையார்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை உள்பட நகரில் மறைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்களின் சிலைகள் நேற்று திறக்கப்பட்டது.

தேர்தல் ஊழியர்கள் மட்டுமின்றி அந்தந்த கட்சியினரும் சிலைகளை திறந்து வைத்தனர். கடந்த சில நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த சிலைகளை திறந்ததும், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் கைத்தட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் மூடப்படும் தலைவர்கள் சிலைகள் தேர்தல் முடிந்த பிறகு தான் திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை, தலைவர்கள் சிலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கெடுபிடியை தளர்த்தி உள்ளதை அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.