தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் : கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 14 தீர்மானம் நிறைவேற்றம்

தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் : கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 14 தீர்மானம் நிறைவேற்றம்

வியாழன் , டிசம்பர் 31,2015,
வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்திட முதலமைச்சரின் மேலான வழிகாட்டுதலின்படி கழக தொண்டர்கள் களப்பணியாற்ற சூளுரைத்தும், ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட வரலாறு கண்டிராத கனமழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை இரவு பகலாகக் கண்காணித்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்கிடப் பாடுபட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் – நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

தமிழகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ளபடி, 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்;

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருவதையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வண்ணம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து படகுகளை பறிமுதல் செய்து மனிதாபிமானமற்ற வகையில் செயல்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திட, மத்திய அரசு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவில் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்த வேண்டும் சங்க காலம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா தொடர்ந்து நடைபெற, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்று ஆவன செய்ய வேண்டும்;

நாடே வியந்து போற்றும் வண்ணம் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், துறை தோறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

தமிழகத்தில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும் உணர்ந்து, அவர்களின் மாண்பையும், மரியாதையையும் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து, மகளிர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி – பாராட்டு;

2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வாக்காளர்களுக்கு உறுதி அளித்தபடி, தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியதற்கும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தமிழகத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கான புதிய முதலீட்டிற்கு வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழர்களின் பெருமையையும், ஆற்றலையும் இந்த நூற்றாண்டில் உலகறியச் செய்தவருமான டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றி சிறப்புப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்க ஆணையிட்டிருக்கும் முதலமைச்சருக்கு பாராட்டு;

தமிழக மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இன்றி, தங்கள் குடும்பத்தினரின் சுயநலத்திற்கென அரசியலில் மக்களை பலிகடாவாக்கி, தொடர்ந்து வளம்பெறத் துடிக்கும் தீய சக்தியும், அதன் வாரிசுகளும் தலையெடுத்திடா வண்ணம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற சபதம் ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

2014 – நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. புதிய சரித்திரச் சாதனை படைத்தமைக்கு முதலமைச்சருக்கு பாராட்டு;

2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெறும் வகையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மேலான வழிகாட்டுதலின்படி, கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றிட சூளுரை;

கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று, தமிழ்நாட்டின் வளமும், வளர்ச்சியும் தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தியாகச் சுடராம், கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும், புத்தாண்டு வணக்கமும் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.