தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு, கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு தூய்மையான நிர்வாகத்தை வழங்கி வருகிறு. ஊழலுக்கு எதிரான கட்சி பாஜ என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பாஜ ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல என்று விமர்சித்துள்ளார். காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட ஜெயிக்க வாய்ப்பு கிடையாது.

கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் த.மா.கா. இணைந்து இருந்தபோதும் வெற்றி பெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. இது தான் தமிழகத்தில் காங்கிரசின் செல்வாக்கு. இப்படிப்பட்ட மாநிலத்தில் ராகுல்காந்தியை முதல்வராக்க வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்த கருத்து இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ், அவர்களுடைய கட்சிக்காரர்கள் கூட சிரிக்கிறார்கள். தனது பேச்சை திசை திருப்புவதற்காக இளங்கோவன் பாஜனதாவை விமர்சித்து இருப்பார் என்று கருதுகிறேன். திமுக நடத்தும் நமக்கு நாமே, விடியல் மீட்பு பயணம் ஏற்கெனவே பழக்கப்பட்டதுதான்.

தேர்தல் நேரங்களில் செய்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பார்கள் வெற்றி பெற்ற பிறகு அதை மறந்து விட்டு மீண்டும் தவறு செய்வார்கள். 1989 தேர்தலில் எங்களை தண்டித்தது போதாதா? உங்ிகள் காலுக்கு செருப்பாக உழைப்போம் என்று மக்களிடம் மன்றாடினார்கள். அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். இதே போல்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை நம்ப வைப்பார்கள். இப்படி சொன்ன பிறகுதான் 2ஜி ஊழலில் ஈடுபட்டார்கள்.  இப்போது நாங்கள், அவர்கள் அளவுக்கு தப்பு செய்ய வில்லையே. குறை வாகத்தான் தப்பு செய்திருக்கிறோம் என்கிறார்கள். திரும்ப, திரும்ப மு.க.ஸ்டாலின் மக்களிடம் இனி தவறு நடக்காது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பில் இருந்தவர் அவர். சர்வ அதிகாரமும் படைத்த துணை முதல்வராக இருந்தார். அப்போது தவறு செய்தவர்களை தண்டிக்க முடியவில்லை. அவர்கள் மீது கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னமும் அவர்களை கூடவே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியாது. மக்களும் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். தி.மு.க.வினருக்கும் அது தெரியும்.  கூட்டணி பற்றி உறுதி செய்யாத நிலையில் பாஜ கூட்டணியும் இப்போது முடிவாகாது.இவ்வாறு அவர் கூறினார்.