தோல்விபயம் காரணமாக வன்முறையை அரங்கேற்றிவரும் தி.மு.கவினர் – மதுரையில் அ.இ.அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் – காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசியதால் பரபரப்பு

தோல்விபயம் காரணமாக வன்முறையை அரங்கேற்றிவரும் தி.மு.கவினர் – மதுரையில் அ.இ.அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் – காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசியதால் பரபரப்பு

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில், தோல்விபயம் காரணமாக, தி.மு.கவினர் அ.இ.அ.தி.மு.க.வினரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசி, தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று முதலமைச்சர் தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்களிடையே நாள்தோறும் அதிகரித்துவரும் ஆதரவைக் கண்டு பொருத்துக்கொள்ள முடியாத தி.மு.கவினர், கடந்த தேர்தல்களை போன்றே மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சமூட்டும் காட்டுமிராண்டிதனமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோலைஅழகுபுரத்தில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. செல்லூர். கே.ராஜீவை ஆதரித்து கழக நட்சத்திர பேச்சாளர் நடிகர் திரு. செந்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த தி.மு.கவினர், பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு கூச்சலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அ.இ.அ.தி.மு.கவினர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க சென்றபோது, தி.மு.க. பகுதிச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் திடீரென அ.இ.அ.தி.மு.கவினர் மீதும், காவல்நிலையத்தின் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தி.மு.கவினரின் இந்த கொலைவெறி தாக்குதலை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதேபோல், நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஹாஜகானுக்கு தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக, தி.மு.க.வினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதன் ஒருபகுதியாக, காளகஸ்தினாபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டம் ஒன்றில், அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஞானவேலனின் கோஷ்டியினருக்கும், ஒன்றியச்செயலாளர் நிவேதா முருகன் கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.கவினரிடையே தொடரும் கோஷ்டி மோதல் காரணமாக, பூம்புகார் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.