நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

நாகை மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி தீவிரம்:முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில், ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

காவிரி டெல்டா மாவட்டமான நாகை மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி என 3 வகையான காலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இதன்மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லானது, ஆண்டுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றது. இவற்றை சேமிக்க பெரிய அளவிலான கிடங்குகள் இல்லாத நிலையில், திறந்த வெளி கிடங்கில் சேமிக்கப்டுகின்றன. மழை, பனி போன்ற இயற்கை மாற்றங்களினால், இந்த நெல் மூட்டைகள் சேதமடைகின்றன. இந்த இழப்பை போக்கும் விதமாக பெரிய அளவிலான தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, வேதாரண்யம் தாலுகா, கோவில்பத்து என்ற இடத்தில் 127 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் முதல்கட்டமாக, 66 ஏக்கரில், 152 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கும், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்புக் கிடங்குகளும் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சர்  ஜெயலலிதாவின் இந்த தொலைநோக்குத் திட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இந்த நெல் தானிய சேமிப்புக்கிடங்கு, அதிநவீன தொழில்நுட்பத்துடன், லாரிகளிலிருந்து கன்வேயர் பெல்ட் உதவியுடன் தானியங்களை கையாளும் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.