நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

சனி, ஜனவரி 16,2016,

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக 90 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர், பருவமழையால் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அளித்த அறிக்கையின்பேரில், விவசாயிகளின் நலனில் என்றும் அக்கறைகொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு தலா 13,500 ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, நாகை மாவட்டம் சிக்கல் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சம்பா சாகுபடி பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு 90 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், தாம்பரம் பகுதிகளில் கனமழை-வெள்ளத்தால் உயிரிழந்த நிர்மலா புஷ்பம், ரமேஷ், மருதநாயகம், ரங்கநாதன், நளினி, குணசேகரன் மற்றும் ராம்தாஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 28 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அமைச்சர் திரு. T.K.M. சின்னையா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.