நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

சனி, நவம்பர் 26,2016,

பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்குவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்திருப்பதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் என்றும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.இரா.காமராஜ் தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை அண்ணா மேலாண்மை நிறுவன கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், உதவி ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்களுக்கான பொது விநியோகத்திட்ட முழு கணினி மயமாக்கல் பயிற்சியை, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.இரா.காமராஜ் தொடங்கிவைத்தார்.

இந்த பயிற்சிக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் திரு.பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால்மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.ஆர்.காமராஜ், பொது விநியோகத்திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்கிட, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் என்றும் குறிப்பிட்டார்.