நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

ஜூலை ,20 ,2017 ,வியாழக்கிழமை,

புதுடெல்லி :  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் கூட்டாக வலியுறுத்தினர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர்  நரேந்திர மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்,  சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.