‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை பாதுகாப்போம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை பாதுகாப்போம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஜூலை ,19 ,2017 ,புதன்கிழமை, 

சென்னை :  ‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாப்போம் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறினார். ‘நீட்’ தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே மாநில அரசு அம்மாவின் அரசு தான் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நீட் தேர்வு பற்றி பேசினார்.

மாநில பாடத் திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 4,675 பேர் மட்டுமே படித்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு எழுதியிருக்கும் 88,431 பேரில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 4,675 பேர் மட்டுமே. மீதமுள்ள 84,000 மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் +2 படித்தவர்கள். ஆகவேதான், நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, இதே சட்டமன்றத்தில், ஏகமனதாக எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, அந்த இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்தோம். ஆனால் அது மத்திய அரசின் கிடப்பில் உள்ளது.குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக, இந்த நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதை இந்த அரசு செய்யவில்லை.

இப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தியாவது, இந்த அரசு, இந்த நீட் தேர்வு பிரச்சினையிலே, முழு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்றபோது, நீதிமன்றத்தில், அரசினுடைய சார்பிலே அழுத்தமான வாதங்களை வைத்து, அதிலே நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற கருத்தைச் சொன்னார். அதற்குப் பின்பு, அரசியல் ரீதியாக, நீங்கள் இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற இரண்டு கருத்துகளையும் அவர் முன்வைத்திருக்கிறார்.இந்த 85 சதவிகிதம், 15 சதவிகிதம் என்ற அடிப்படையில், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஒரு அரசாணையை நாங்கள் பிறப்பித்தோம். அந்த அரசாணையைப் பிறப்பிப்பதற்கு முன்பேகூட, சட்ட வல்லுநர்களோடு மிகக் கடுமையாக கலந்தாலோசித்தோம். காரணம், ஏற்கெனவே, இரண்டு மசோதாக்களுக்கு சட்டமன்றத்திலே ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிலே இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், அந்த இரண்டு மசோதாக்களையும் அப்படியே போட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், மிகுந்த கவனத்தோடுதான் நாம் அந்த விஷயத்தை அணுக வேண்டும்.அதற்குப் பின்னாலே, மாநிலவழிக் கல்வி படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு என்றும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு என்றும் அரசு ஆணை போடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்டவர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மா அரசு மிகுந்த கவனத்தோடு, கடந்த ஆண்டு, நாகேஸ்வரராவ், பி.பி. ராவ், இந்த ஆண்டு நாப்டே போன்ற இந்திய அளவில் இருக்கிற மூத்த வழக்கறிஞர்களை முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில் அவர்களையெல்லாம் வைத்து அரசின் சார்பில் மிகவும் அழுத்தமான வாதங்களை எடுத்துவைத்தார்.

உச்ச நீதிமன்றத்தில் அம்மா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக அழுத்தமான வாதங்களை வைத்ததன் அடிப்படையில்தான் அங்கு போடப்பட்ட 15க்கு மேற்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசாணைக்கு தடை விதிக்கவில்லை. இதற்கு நாங்கள் தடை கொடுக்க முடியாது. நீங்கள் உயர் நீதிமன்றத்தில் போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வழக்கை முடித்துவிட்டனர். அந்த இடத்தில் அரசு மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செயல்பட்டது. நீங்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்குப் பிறகு, மீண்டும் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல், அன்றைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்திருந்தாலும்கூட, அரசினுடைய சார்பில் அரைநாள் முழுக்க அரசின் வாதங்களை எடுத்துச் சொன்னார்.4.2 லட்சம் மாநில பாடத்திட்டப்படி படித்த மாணவர்கள். 4,675 பேர் சிபிஎஸ்இ மூலம் படித்தவர்கள். விகிதாச்சாரப்படி 5 சதவிகிதம் சிபிஎஸ்இ–க்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 95 சதவிகிதமும் போட்டிருக்க வேண்டும். இருந்தாலும், கூடுதலாக 10 சதவிகிதம் சேர்த்து 15 சதவிகிதம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏன் கொடுத்தோம் என்று சொன்னால், இதுபோன்று நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து, தடை ஆணை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதையும் தாண்டி வழக்கிற்குச் சென்றனர்.

யார் வழக்கில் வாதிட்டார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லவில்லை. இன்றைக்கு எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நாம் அதற்கு தடை ஆணை பெறவில்லை. உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி தடை ஆணை கொடுத்துள்ளார். உடனே, அடுத்த நிமிடமே, அப்பீல் செய்வோம் என்று சொல்லி, நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது. கவுன்சிலிங் நான்கு நாட்கள் தள்ளிப்போனால் கூட இந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சரும், அம்மாவின் அரசும் இன்றுவரை, இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. பெஞ்சில் நாம் அப்பீல் செய்திருக்கிறோம். இன்னும் நாம் வாதிட்டு நல்ல தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறபொழுது, இது முடிந்துவிட்டது என்பதுபோன்ற ஒரு செய்தியை வெளியிட வேண்டாம். இதற்கு நடுவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த நீட் பற்றி பல்வேறு கருத்துகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இங்கே இருக்கக்கூடிய ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சருடைய மனைவிதான் 15 வழக்குகளிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்காக, மாநில மாணவர்களின் நலனுக்கு எதிராக வாதிடுகிறார்கள். ஆனால் அதே கட்சியின் தலைவர் வெளியில் சொல்கிறார், தமிழ்நாடு அரசு சரியாக வாதங்களை முன்வைக்கவில்லை என்று, தமிழ்நாடு அரசில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்காக வழக்கு மன்றத்தில் வாதிட்டது யார்? யாருமே வரவில்லை.

தமிழ்நாடு அரசு மட்டும்தான் அந்த மாணவர்களுக்கு துணைநின்றது. வேறு யாராவது துணை நின்றார்களா? யார் துணை நின்றது? நீங்கள் சொல்லுங்கள். அரசியல் காரணங்களுக்காக ஒவ்வொருவரும் வெளியில் ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது யார் அங்கே வாதிடுகிறார்கள்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? யார் வாதத்தை முன்வைக்கிறார்கள்? மாநிலக் கல்வி படித்த தமிழகத்திலிருக்கக்கூடிய இந்த மாணவர்களின் நிலையை யார் எடுத்துச்சொல்வது? தமிழக அரசு மட்டும்தான் தொடர்ந்து எடுத்துச் சொல்கிறது  என்று அவர் கூறினார்.