நீதி விசாரணை அறிவிப்பு மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் : ஓ.பன்னீர்செல்வம்

நீதி விசாரணை அறிவிப்பு மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் : ஓ.பன்னீர்செல்வம்

சனிக்கிழமை, மார்ச் 04, 2017,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :-

மறைந்த முதல்வரின் மரணம் தொடர்பாக 7.5 கோடி மக்கள் மனதிலும் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. 75 நாட்களாக மருத்துவமனையில் அவர் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிய வேண்டும். நீதிவிசாரணை கோரி மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்குள் அரசு நல்ல முடிவு அறிவிக்காவிட்டால், அறப்போராட்டம் வெடிக்கும்.

பிரதமரை நாங்கள் சந்தித்த போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர முடியாது. மத்திய சட்டத்தில் மாநில அரசு திருத்தம் கொண்டு வந்தால், நாங்கள் உதவி செய்கிறோம் என்று பிரதமர் கூறினார். அதன்பின், நானே பிரதமரிடம் தம்பிதுரை வந்துள்ள விவரத்தை கூறினேன். ஆனால், ஒரு பிரதமரை சந்திப்பதற்கான நடைமுறைகள் கூட தெரியாமல் அவர் இவ்வளவு நாள் இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

நான் ராஜினாமா செய்த அன்று, முதலில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதாக கூறினார்கள். இது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் கேட்டபோது, தொகுதி வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கடிதம் அளிக்க வரவழைக்கப்பட்டதாக கூறினார்கள். அதன்பின், நான் தலைமைச் செயலகத்தில் இருந்து, எண்ணெய் கசிவு நடந்த இடத்தை பார்வையிட சென்றுவிட்டேன். பிறகு, அழைப்பதாக கூறினார்கள். அங்கு சென்றபோது அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் சசிகலா முதல்வராக விரும்புவதாக தெரிவித்தார்கள். அதன் பின் நான் வற்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.

அதன்பின் 2 நாட்கள் கழித்து, முதலில் கே.பி.முனுசாமி இது தொடர்பாக பேசினார். அதன்பின், பி.எச்.பாண்டியனும் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்துதான் நான் ஜெயலலிதா சமாதியில் சென்று அமர்ந்தேன். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களை கேட்டேன். அவர்கள் அளித்த தகவல்கள் என் மனதை சங்கடப்படுத்தின. அதனால்தான், நீதி விசாரணை வேண்டும் என கேட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என கூறினேன். ஆனால் மறுத்துவிட்டார்கள்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.