நீலகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 8,500 பயனாளிகளுக்கு 8 கோடியே 6 லட்சம் ரூபாய் திருமண நிதி,33 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 8,500 பயனாளிகளுக்கு 8 கோடியே 6 லட்சம் ரூபாய் திருமண நிதி,33 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது

திங்கட்கிழமை, பிப்ரவரி 22, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் ஒன்றான தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,349 பயனாளிகளுக்கு 27 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 33 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. 

ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர்  ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பசுமை வீடுகள் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் என லட்சக்கணக்கான பெண்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் கவரும் வகையில் செயல்படுத்தப்படும் உன்னத திட்டம்தான் திருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன், நான்கு கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் நான்கு கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,690 பட்டதாரி பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன், நான்கு கிராம் தங்கம், 5,659 பட்டதாரி அல்லாத பெண்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் நான்கு கிராம் தங்கம் என மொத்தம் 8,349 பெண்களுக்கு 27 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி, 33.4 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இறுதிகட்டமாக 471 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 2 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் சி.கோபாலாகிருஷ்ணன், தாட்கோ தலைவர் திரு.எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சம் நெகிழ் நன்றி தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தஞ்சாவூரில் ஆயிரத்து 968 ஏழைப் பெண்களுக்கு 8 கோடியே 39 லட்சம் ரூபாய் திருமண நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கக் காசுகளையும் அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட சமூக நலத்துறை மூலம் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 808 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைச்சர் திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் வழங்கினார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 164 பயனாளிகளுக்கு 4 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி என 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். 

விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 655 பயனாளிகளுக்கு 4 கிராம் தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி என ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.