நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்.மற்றும் பாஜக ஆதரவு

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்.மற்றும் பாஜக ஆதரவு

வெள்ளி, நவம்பர் 04,2016,

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு அளித்துள்ளன.

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டி யிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தங்கள் கட்சியினருடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், என்.ஆர்.காங் கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்துக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். பொதுத்தேர்தல் நடைபெற்று 5 மாதங்களில் இந்த இடைத்தேர்தல் யாரால் திணிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், பண பலத்தோடு முறைகேடுகள் செய்துவருகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வோம். இதற்காக, அதிமுகவோடு கலந்து பேசி குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.

ரங்கசாமியின் இந்த அறிவிப் பைத் தொடர்ந்து நெல்லித் தோப்பு தொகுதி அதிமுக பொறுப் பாளர்களும், தமிழக அமைச்சர் களுமான சிவி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்எல்ஏ, புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன், அன்பழகன் எம்எல்ஏ, கோகுலகிருஷ்ணன் எம்பி மற்றும் வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் தனியார் ஹோட்டலுக்கு வந்து ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இடைத்தேர்தல் பணிகளை இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து என்.ஆர்.காங். போட்டியிட்டது. சுயேச்சை ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்ததால் கூட்டணி முறிந்தது. 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட்டன. ஆளுங்கட்சியாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியானது. அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் 5-ல் இருந்து நான்காக குறைந்தது.

தற்போது இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். ஆதரவு அளித்திருப்பது பற்றி புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, “எங்கள் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தருவதாக தெரிவித்தனர். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கூட்டணி குறித்து பின்னர் தமிழக முதல்வர் முடிவெடுப்பார். ஜெயலலிதா அனுமதியோடு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

பாஜகவும் ஆதரவு

புதுச்சேரி பாஜக பொதுச் செயலர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் நேற்று கூறும்போது, “நிபந்தனையற்ற ஆதரவை வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு அளிக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க என்.ஆர்.காங்கிரஸ் போன்று இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றனர்.