பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் டி.ஜெயக்குமார்

பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகமிக அழுத்தம் கொடுக்கும் என்று நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  ”பட்டாசுக்கு 28 சதவீதம், தீப்பெட்டிக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு, தீப்பெட்டித் தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

அவருக்குப் பதிலளித்த நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், ”எந்தெந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் வரி என்பதை ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் தீர்மானிக்கிறது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இனி வரி விதிக்கும் அதிகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு வரி விகிதத்தை மாற்றியமைக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புக் கொண்டுள்ளார்.

பட்டாசுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால் சீனப்பட்டாசுகள் குவிந்து இந்தியாவில் பட்டாசுத் தொழில் அழியும் நிலை ஏற்படும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகமிக அழுத்தம் கொடுக்கும்” என்று கூறினார்.