பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

பணியின்போது உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் ஏ.பாலமுருகன், திருச்சி கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் து.ஆரோக்கியதாஸ், தனுஷ்கோடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முனியசாமி, கரூர்-வேலாயுதம்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் சு.பாஸ்கரன், திருவண்ணாமலை-புதுப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடலூர்-நடுவீரப்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மு.சண்முகம் ஆகிய 6 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

இதேபோல், செங்கல்பட்டு நகரப் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சிவகுமார், திருவண்ணாமலை- செய்யாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சூ.திருவேங்கடம், வேலூர்-அணைகட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சூ.சந்திரசேகர், திண்டுக்கல் மாவட்ட தனிப் பிரிவில் தலைமைக் காவலர் தாமோதரன், அரியலூர்-செந்துறை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஆ.எழிலழகன், திருவள்ளூர்- ஆரணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆ.மனோகரன், சேலம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளர் சூ.பக்ருதீன், மதுரை ஊமச்சிக்குளம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் காசி ஆகிய 8 பேர் உடல்நலக் குறைவால் இறந்தனர். இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.