பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திடீர் ஆய்வு:பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம், விலை விவரம் குறித்து கேட்டறிந்தார்

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திடீர் ஆய்வு:பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம், விலை விவரம் குறித்து கேட்டறிந்தார்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015,

சென்னை : சென்னையில் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண்ணை பசுமைக்கடைகளின் மூலம் இது வரை 1 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரம் கிலோ காய்கறிகள் ரூ 35.34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, அண்ணாநகர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை மற்றும் நியாயவிலைக்கடைகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் காய்கறிகளின் தரம், விலை விவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் காய்கறிகள் தரமானதாகவும், நியாயமான விலையிலும் உள்ளது என்றும், இக்கடைகள் வாயிலாக தட்டுப்பாடின்றி மழைக்காலத்திலும் கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஆய்விற்கு பின்னர்அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது : தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் வெளிச்சந்தை விலையினைக் கட்டுக்குள் வைக்கும் வகையிலும் தங்குத் தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கவும், விலைநிலைப்படுத்தும் நிதியாக முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்\. காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை மாவட்டத்தில் 2 நகரும் கடைகள் உட்பட 42 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தமையால், வெளிச்சந்தை விலையினை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காகவும், குறைந்த விலையில் தரமான காய்கறிகளைப் பொது மக்கள் தட்டுப்பாடின்றி பெற சென்னை நகரில் கூடுதலாக 50 தற்காலிக பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்காலிக பண்ணை பசுமை கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் ஆரம்பித்த சில நாட்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை குறையத் தொடங்கியது.

மேலும், கடந்த வாரத்தில் பெய்த கடும் மழையால் சென்னைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தமையால், காய்கறிகளின் விற்பனையைச் சீர்படுத்தும் வகையிலும், நுகர்வோருக்கு உரிய நேரத்தில் தரமான காய்கறிகள், நியாயமான விலையில், அவர்களின் குடியிருப்புகளுக்கருகில் கிடைக்கும் வகையிலும், கூடுதலாக 11 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 32 இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் நியாமான விலையில் தரமான காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். மேலும், கூடுதலாக 100 டன் உருளைக்கிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டதன்பேரில், தற்போது சென்னையில் 536 கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 1,21,42,040 கிலோ காய்கறிகள் ரூ.35.24 கோடி அளவிற்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் மழை நீரால் 247 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் பாதிக்கப்பட்டன. மழைநீரால் மிகவும் சேதமடைந்த 29 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடி நடவடிக்கையாக 8 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அப்பகுதிகளில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்ட நியாயவிலைக் கடைகள் போர்கால அடிப்படையில் உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 219 கடைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 28 கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக அருகில் தற்காலிக் கடைகள் தொடங்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள 1273 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் வாயிலாகவும் தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உற்றத் தோழனாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது கைத்தறித்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீமுரளீதரன், ., பண்டகசாலையின் தலைவர் .இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.