பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு, அமைச்சர்கள் அஞ்சலி ; பெற்றோர்களிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு, அமைச்சர்கள் அஞ்சலி ; பெற்றோர்களிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

புதன்கிழமை, பிப்ரவரி 01, 2017,

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் வரப்பட்டன. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், 20 லட்சம் ரூபாய்கான காசோலையையும், பெற்றோர்களிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், ஜம்மு-காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல் நேற்று இரவு 11.30 மணியளவில், விமானம் மூலம் தஞ்சை விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து, உரிய ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர் திரு. இரா. துரைக்கண்ணு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் திரு. ஆ. அண்ணாதுரை, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் எம். ரெங்கசாமி ஆகியோரும் மலர் வளையம் வைத்து வணங்கினர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இளவரசனின் தந்தை மற்றும் தாயிடம் அமைச்சர் வழங்கினார்.

இதேபோல், காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மதுரை பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரபாண்டியன் மற்றும் கே. வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தாமோதரக்கண்ணன் ஆகியோரின் உடல்கள், மதுரை விமான நிலையத்திற்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ராணுவ வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பள்ளக்காபட்டியில், ராணுவ வீரர் சுந்தரபாண்டியனின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர், சுந்தரபாண்டியனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ராணுவ வீரரின் பெற்றோரிடம், தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோல் மதுரை கே. வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தாமோதரக் கண்ணன் இல்லத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர், தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.