பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செவ்வாய், நவம்பர்,24-2015

பன்றிக் காய்ச்சல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 11.12 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
பன்றிக் காய்ச்சல் நோய் என்பது பருவ மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் வகையைச் சார்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி எடுக்கப்பட்டு வருகின்றன.

கையிருப்பில் மருந்துகள்: 11 லட்சத்து 12 ஆயிரம் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்பட்டால்கூட வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் டாமிஃப்ளூ மருந்துகள் (சிரப்) 26,600 பாட்டில்கள், 5,257 மருத்துவப் பாதுகாப்புக் கவசங்கள், 39,461 பாதுகாப்பு முகக் கவசங்கள், 81,611 மூன்று அடுக்கு முக கவசங்களும் கையிருப்பில் உள்ளன.
ஆய்வு மையங்கள்: பன்றிக் காய்ச்சலைக் கண்டறிவதற்கு 13 தனியார் ஆய்வகங்களும், சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, புதுச்சேரி ஜிப்மர், சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையம் என மொத்தம் 20 ஆய்வு மையங்கள் உள்ளன. சளி மாதிரியை எடுத்து இந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி, முடிவைத் தெரிந்து கொள்ள முடியும்.
சிறப்பு வார்டுகள்: சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கென்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தகவல் மையம்: பன்றிக் காய்ச்சல் குறித்தத் தகவல்களைப் பெறவும், தகவல் அளிப்பதற்கும் 044-2435 0496, 2433 4811, 93614 82899 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.