பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

ஜூன் 14, 2017,புதன் கிழமை,

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.முதல் நாளான இன்று வனம், சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், பதிலுரையும் இடம் பெறுகிறது. விவாதங்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன் பதிலளிக்கின்றனர்.

இன்று காலை 10 மணிக்கு சபை கூடுகிறது. சபையில், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு  பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. இதன் பின், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.

இதைத்தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பதில்களை அளித்து துறை வாரியான புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வி ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 41 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி ஜூன் 19 வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.