பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை, நவ. 18

மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சேத விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று கால்நடை இழப்பு, படகுகள் இழப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்த இழப்புகளுக்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.