பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், மார்ச் 02,2016,

உடல் நலக்குறைவு, சாலை விபத்து, மின்சாரம் தாக்கி என பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தமிழ்செல்வன்; நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜெ.நேரு; திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்த எஸ்.சாந்தி ராமர்முத்து; தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த சி.எஸ்.ராஜேந்திரன்; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஏ.முருகானந்தம்; திருச்சிராப்பள்ளி மாநகர குற்றப் பதிவேடுகள் கூடத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்த எம்.ஆதிமுத்து; மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தங்கராஜ்; சென்னை, அருங்காட்சியகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த எம்.முத்துகுமார்; கோயம்புத்தூர் மாநகரம், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்த எம்.மகேஸ்வரன்; சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஏ.ஜோஸ்; சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பி.தங்கராஜ்; புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வி.துரை ஆகியோர் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.
சேலம் மாநகர அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்த ஜி.கண்ணன்; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த எம்.வேணுகோபால்; கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்த ஆர்.குமாரராஜா; திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த எஸ்.ராஜகணபதி; சென்னை, பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜி.பாலசுப்பிரமணியம்; சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், அடைமதிப்பான் குளம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள்; விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ்; திருவள்ளூர் மாவட்டம், பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார்; திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சர்க்கரைகுளத் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம்; காஞ்சீபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நங்கநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்த அரி பிரசாத்ராஜி; திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.கிருஷ்ணாபுரம் பிரிவு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் களப்பணியாளராகப் பணிபுரிந்து வந்த செல்வராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.
தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.