பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப்புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன் : மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப்புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன் : மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

ஜூன் 08, 2017,வியாழக்கிழமை, 

சென்னை : பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் – சீருடைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகளை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிற பள்ளிகளிலும் விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

பிளஸ்–2 தேர்வில் ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 99.3 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதற்கு, சிறப்பான கற்பித்தல் திறனை வெளிப்படுத்திய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சசி ஸ்வரன் சிங்குக்கு, அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:–

கல்வி நிறுவனங்களின் தேவைகளை இந்த ஆண்டு இறுதிக்குள்ளே நிறைவேற்றி கொடுக்கப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்படும். சாலை விதிகளை மதிக்கும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு எப்படி வினாத்தாள் வர இருக்கிறது? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டியது உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடையும்.

பிளஸ்–1 பொதுத்தேர்வு கொண்டுவந்திருப்பது குறித்து மாணவர்கள் அச்சப்படவேண்டியது இல்லை. சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல கல்வியை கற்று தருவார்கள். மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாகி, இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கவேண்டும்.  இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், இணை இயக்குனர்கள் பாஸ்கர சேதுபதி, நரேஷ், செல்வக்குமார், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்த், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.