பாசனத்துக்காக வைகை அணை நாளை திறப்பு:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பாசனத்துக்காக வைகை அணை நாளை திறப்பு:தமிழக முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி,நவம்பர்,27-2015

 

வைகை அணையிலிருந்து நாளை (28.11.2015) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் பாசனத்திற்காக 28.11.2015 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2,59,663 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.