பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள்:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள்:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

 

சென்னை,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பண்ணை பசுமை கடைகள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013–ம் ஆண்டு ஜூன் 20–ந்தேதி, நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும், 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை தொடங்கி வைத்தார். நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உள்பட மொத்தம் 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கடந்த மாதம் 30–ந்தேதி வரை 11 ஆயிரத்து 735 டன் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் தரமான காய்கறிகளைப் பொதுமக்கள் பெற சென்னை நகரில் கூடுதலாக 50 காய்கறி விற்பனை மையங்களை, தற்காலிகமாக திறக்க முதல்–அமைச்சர் கடந்த மாதம் 17–ந்தேதி ஆணையிட்டார்.

நகரும் கடைகள்

தற்போது கூடுதலாக தொடங்கப்பட்ட 50 தற்காலிக பண்ணை பசுமை கடைகள் மூலம் 18 நாட்களில், 62.33 டன் தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கடந்த மாதம் 30–ந்தேதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இக்கடைகள் ஆரம்பித்த சில நாட்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை குறையத் தொடங்கியது. இந்த தற்காலிக பண்ணை பசுமை கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இந்த வாரத்தில் பெய்த கடும் மழையால் சென்னைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தமையால், காய்கறிகளின் விற்பனையை சீர்படுத்தும் வகையிலும், நுகர்வோருக்கு உரிய நேரத்தில் தரமான காய்கறிகள், நியாயமான விலையில், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கிடைக்கும் வகையிலும், கூடுதலாக 11 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் கீழ்க்கண்ட 32 இடங்களில் விற்பனை செய்ய உள்ளன.

32 இடங்கள்

காரணீஸ்வரர் கோவில் தெரு (சைதாப்பேட்டை), ஜி. என். செட்டி தெரு (தியாகராய நகர்), காம்தார் நகர், (நுங்கம்பாக்கம்), ராகவேந்திரா கல்யாண மண்டபம், (கோடம்பாக்கம்), நுங்கம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன், ரட்லேண்ட்கேட், எல்லையம்மன் கோவில் தெரு, (தேனாம்பேட்டை), மயிலாப்பூர் குளம், பெசன்ட்நகர், சிந்தாதிரிப்பேட்டை, நேஷனல் பப்ளிக் ஸ்கூல் (கோபாலபுரம்), ராயப்பேட்டை, சாந்தி காலனி, (அண்ணாநகர்), போக்குவரத்து அலுவலகம் அருகில் (அண்ணாநகர்), வசந்தம் காலனி (அண்ணாநகர்), எம்.எம்.டி.ஏ. காலனி அரும்பாக்கம், சேணியம்மன் கோவில் தெரு, (தண்டையார்பேட்டை), திருவொற்றியூர் பேருந்து நிலையம், பார்த்தசாரதி பாலம் (தங்கசாலை), மண்ணப்பன் தெரு, (பழைய வண்ணாரப்பேட்டை), சிங்கந்தர்பாளையம், (கொருக்குப்பேட்டை), வியாசர்பாடி, முத்தமிழ் நகர், (வண்ணாரப்பேட்டை), காசிமேடு, குறுக்கு தெரு, (புது வண்ணாரப்பேட்டை), வீரராகவன் தெரு, (புது வண்ணாரப்பேட்டை), பாலவாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லூர் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.