பாராளுமன்ற தேர்தல் வெற்றியை விட ‘சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற களப் பணியாற்றிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியை விட ‘சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற  களப் பணியாற்றிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

சனி, ஜனவரி 30,2016,

சட்டப் பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலையொட்டி, அதிமுகவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, அதிமுகவினர் ஒவ்வொருவரும் விழிப்புடன் பணியாற்றி ஜனநாயக வயலில் இருந்து நம்முடைய விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
வாக்காளர் சிறப்பு முகாம்கள் பணியாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்களில் சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவரி 6 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்.
இருப்பிடம் மாறி சென்றிருக்கும் வாக்காளர்களின் பெயர்களும், இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ்களோடு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அதிமுகவினர் அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை உரிய சான்றிழ்களோடு பூர்த்தி செய்து, அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். பட்டியலில் வேறு ஏதேனும் பிழைகள், மாற்றங்கள் இருந்தாலோ, முகவரி மாற்றம் இருந்தாலோ அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
மிகப் பெரிய வாக்கு வித்தியாசம்: தமிழக மக்களின் பேராதரவு பெற்று விளங்கும் வகையில் தமிழக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
மேல் வகுப்புக்குச் செல்ல ஆர்வத்துடன் இருக்கும் ஒரு நல்ல மாணவன் தேர்வை ஆவலுடன் எதிர்கொள்வதைப் போல, கடந்த 5 ஆண்டுகளில் பிற மாநிலங்கள் பலவும் பின்பற்றத் துடிக்கும் அற்புதமான மக்கள் நலப் பணிகளை தமிழக அரசு செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தேர்தலை அதிமுக ஆவலோடு எதிர்கொள்ளக் காத்திருக்கிறது.
இந்தத் தேர்தல் அதிமுக வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்திடும். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்துக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணற்ற வெற்றிகள் கிடைத்திருக்கிறது.
2014-ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் நாடே திரும்பிப் பார்த்து வியப்படையும் மகத்தான வெற்றியை அதிமுக பெற்றது. இதை போலவும், இன்னும் ஒரு படி கூடுதலாக அதைவிடவும் சிறப்பான வெற்றியைப் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனது (ஜெயலலிதா) பாதையில் களப் பணியாற்றிட அதிமுகவினர் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.