பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,15 ,2017 ,சனிக்கிழமை, 

சென்னை : பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவிடன் புதிதாகக் கட்டப்படும். நடப்பாண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்கோடு வெளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் 14 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.

உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக பெறப்படும் பாலை கையாள திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம் – திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் குளிர்பதன வசதி, நவீன பாலகம் அமைத்தல், பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துதல், தீவனக் கிடங்குகள், நெய் நிரப்பும் இயந்திரங்கள், தரக்கட்டுப்பாடு ஆய்வகம், பால் பை நிரப்பும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் கிராம அளவில் சுமார் 12,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கிராம அளவில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால்கொள்முதல் செய்யும் பணியுடன், பால் தரப் பரிசோதனை செய்தல், கால்நடை தீவனம் வழங்குதல் போன்ற இதர பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 20,000 பணியாளர்களுக்கு, அச்சங்கங்களின் பால் உற்பத்தி மற்றும் அவை ஈட்டும் இலாபம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவர்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறுவைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து, அவர்களது பணிமூப்பு அடிப்படையில், அனைத்து முதுநிலை பணியாளர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், மாற்று ஏற்பாடாக பணப்பயன்பெறும் மாற்றுத் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள்சங்கங்களின் 20,000 பணியாளர்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், அவர்களுக்குமாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதற்கான 5 கோடி ரூபாய் செலவினம் சங்க நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். என்று அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.