பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

திங்கள் , டிசம்பர் 19,2016,

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று  திங்கள்கிழமை தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.இந்தச் சந்திப்பின்போது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய நிதி ஒதுக்கக் கோருவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மனு அளிக்க உள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியது. புயலால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்த புயலால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிவாரணப் பணிகளுக்காக அவசர நிதியாக ரூ. 500 கோடியை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஒதுக்கி உள்ளார்.

நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதல் நிதி தேவைப்படுவதால் உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிவாரண நிதி கோருவதற்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று காலை அவர் சென்னையிலிருந்து தில்லி செல்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து, தமிழகத்தில் வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு மத்திய அரசு விரைந்து நிவாரணம் அளிக்க வேண்டும்; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்; நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளிக்க உள்ளார்.
அதன் பிறகு, அன்றைய தினமே முதல்வர் சென்னை திரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் தில்லி செல்வது இதுவே முதல் முறையாகும்.