புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

சென்னை : பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில், மேதஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-  பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் 9 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், 30 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்து, 49 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டுமான தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கிட மூன்று நகரும் மருத்துவமனைகளின் சேவையினையும் துவக்கி வைத்தார்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தமிழ்நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், தொழிற்பயிற்சி மையங்கள் அரசின் சார்பில் கூடுதலாக தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை, கருத்தில் கொண்டும் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும் என்று  முதல்வர்  ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி  சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகவும், மேலும் தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென திருவள்ளூர் மாவட்டம் – வடகரையிலும், திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் சிறைவாசிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கிளை ஆகியவற்றை முதல்வர்  ஜெயலலிதா துவக்கி வைத்தார்

திறன் பயிற்சிகளை வழங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கிண்டி, மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு அலுவலகக் கட்டடத்தின் மேல்தளத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கக அலுவலகம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 13.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, சென்னை – கிண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக கட்டடத்தின் முதல் தளத்தில் 10,660 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அலுவலகக் கட்டடம், கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடல்சார் இயந்திர பொருத்துநர் தொழிற்\பிரிவிற்கான கட்டடம், திருவள்ளூர் மாவட்டம் – அம்பத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 56 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொருத்துநர் மற்றும் கட்டடப் பட வரைவாளர் ஆய்வகக் கட்டடம் மற்றும் அடிப்படை பயிற்சி மையத்தில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு தயாரிப்பு மற்றும் உபசரிப்பு உதவியாளர்  ஆய்வகக் கட்டடம், வேலூர் மாவட்டம் – அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பற்றவைப்பவர் மற்றும் ஏ/சி மெக்கானிக் ஆய்வகக் கட்டடம், இராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இலகுரக வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆய்வகக் கட்டடம், கரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம், தூத்துக்குடி மாவட்டம் – வேப்பலோடையில் 2 கோடியே 48 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் என மொத்தம் 9 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர்  ஜெயலலிதா  திறந்து வைத்தார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.