புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாருக்கும், துணை தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டார்.

இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியை கைப்பற்றுவேன் என்று கூறி வந்த எர்ணாவூர் நாராயணன் திடீரென்று புதிய கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி, ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று அவர் தொடங்கினார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம், எர்ணாவூர் நாராயணன் இதனை அறிவித்தார்.

சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்துடன், ‘நூர்நுனி கூம்பு’ சின்னம் பொறித்த கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்துவைத்தார். சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பட்டியலையும் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியின்போது, எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கடிதம் அளிப்பேன். அவர் வாய்ப்பு அளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன். அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம் பிரசாரத்தில் ஈடுபடும். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வோம்’ என்றார்.