புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் :நாடார் பேரவை மாநிலத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் :நாடார் பேரவை மாநிலத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் அறிவிப்பு

திங்கள் , பெப்ரவரி 29,2016,

இரு வாரங்களில் புதிய கட்சியைத் தொடங்கி, 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார் நாடார் பேரவை மாநிலத் தலைவரும், நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எர்ணாவூர் ஏ.நாராயணன்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு நாடார் பேரவை நிர்வாகிகளையும், எனது ஆதரவாளர்களையும் மாவட்டம் வாரியாகச் சந்தித்து வருகிறேன். அதன்படி ஏற்கெனவே தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளேன்.
திருநெல்வேலியில் நடைபெற்றுள்ள கூட்டத்தில் புதிய கட்சி தொடங்க மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் இரு வாரங்களில் புதிய கட்சியின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்படும். நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் எனது தலைமையிலான கட்சி, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாடுபடும்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு திறம்பட நிறைவேற்றியுள்ளது என்றார் அவர்.