புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017,

சென்னை : தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை, கிண்டியில் நேற்று மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், 30 அமைச்சர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி வினோதா ராவ், முதல்வராக பொறுப்பேற்கும் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் விழா மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில், அமைச்சர்களாக பதவியேற்க இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கும்படி ஆளுநரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதையடுத்து, கவர்னரின் உத்தரவின்பேரில், நாளை  சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.