புயல்,நிவாரண பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புயல்,நிவாரண பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வியாழன் , டிசம்பர் 15,2016,

வர்தா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களைச் சீர் செய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட வர்தா புயலில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களிலும் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1,000 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களைச் சீர் செய்யும் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் புதன்கிழமை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்த போது வீசிய சூறாவளிக் காற்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்சார சேவை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இந்தப் பாதிப்புகளைச் சீர் செய்ய தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்வதற்கான உடனடி உள்கட்டமைப்பு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் உயிரிழந்தோர்-கால்நடைகளை இழந்தோருக்கு நிவாரண உதவித் தொகை அளிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.350 கோடியும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.75 கோடியும், மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகைக்கென ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.500 கோடி அளிக்கப்படும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.