பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஜனவரி 17,2016,

புதுடெல்லி – பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை திரும்பபெற வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசாவும், டீசலுக்கு ரூ.1.83–ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை உடனே திரும்பபெற வேண்டும். கலால் வரியை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கை நியாயமானது அல்ல. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் அந்த விலை குறைப்பு பயன் பொதுமக்களுக்கு சென்று அடையவில்லை. மத்திய அரசு நவ.-2014 முதல் கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் விலை குறைந்திருக்கும். பெட்ரோல் ரூ.10-ம், டீசல் ரூ.12-ம் குறைந்திருக்கும்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் நிர்ணயக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தாம் பல முறை தெரிவித்துள்ளதாகவும் – அவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னமும் குறைக்கப்பட ஏதுவாகும் எனவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.எனவே கலால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.