பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா: விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா: விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

திங்கள், ஜனவரி 11,2016,

கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இதுவரை ஐந்து கட்டமாக சுமார் ரூ.221 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் 5,46,248 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் எம்.வி.பி.சொக்கலிங்கம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பெண்ணாடத்தில் 5,575 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளையும், லால்பேட்டையில் 4,873 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளையும், புதுப்பாளையத்தில் 4,931 பயனாளிகளுக்கு ரூ.1,67,45,676 மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 15,379 பயனாளிகளுக்கு ரூ.5,19,45,676 மதிப்பீட்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:–
இன்றைய தினம் ஒரு தலைசிறந்த, உன்னதமான நிகழ்வு. பெண்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களின் நேரம், சக்தியை சேமிக்கும் வகையில் முதலமைச்சர் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி வருகிறார். பெண்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் வாழ்க்கை பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விலையில்லா கறவை மாடு, ஆடுகள், ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி, பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், குறிபேடுகள் போன்ற அனைத்தையும் பெண்களிடமே வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் முதலமைச்சர் அம்மா வழங்கி வருகிறார்.மற்ற மாநிலங்களில் இல்லாத இந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் தான் முதலமைச்சர் அம்மாவால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த லால்பேட்டை, கொல்லிமலை மேல்பாதி, கொல்லிமலை கீழ்பாதி, கடலூர் நகராட்சிக்குட்பட்ட 17 முதல் 21 வார்டுகளை சேர்ந்த மொத்தம் 15,379 பயனாளிகளுக்கு ரூ.5,19,45,676 மதிப்பீட்டில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவைகள் அனைத்தும் பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.ராமஜெயம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழழகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் நகர மன்ற தலைவர் ஆர்.குமரன், விருத்தாசலம் நகர மன்றத்தலைவர் அருளழகன், குமராட்சி ஒன்றிக்குழு தலைவர் கே.ஏ.பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் என்.மதியழகன் (பெண்ணாடம்), நீதிமன்னன் (திட்டக்குடி), ஏ.ஆர்.சபியுல்லா (லால்பேட்டை), கடலூர் வட்டாட்சியர் சிவா மற்றும் கடலூர் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.