பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசாணை வெளியீடு

பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசாணை வெளியீடு

செவ்வாய், நவம்பர் 08,2016,

சென்னை : தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டும் வரும் மகப்பேறு விடுப்பு தற்போது 6 மாதங்களாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அதனை 9 மாதங்களாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பேசுகையில்.,

பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980-ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டோம். எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதன்படி, அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்துவதற்கான  அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  இந்த புதிய அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.